இஸ்ரேலில் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர் சிக்கித் தவிக்கும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அவர் போர் நடக்கும் காஸா நகருக்கு வெகு அருகாமையில் இருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற காஸா நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென அறிவிக்கப்படாத போரைத் தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம் என்று கூறி, இஸ்ரேல் போரை தொடங்கி இருக்கிறது. இப்போர் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்ற பலரும் போர்ச் சூழலில் சிக்கித் தவித்து வருகின்றனர். முதல்கட்டமாக மத்திய பா.ஜ.க. அரசு 212 பேரை இஸ்ரேலில் இருந்து மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. மற்றவர்களையும் மீட்க முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக சென்றிருந்த திருச்சி பேராசிரியை ஒருவரும் இஸ்ரேலில் சிக்கித்தவித்து வரும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேளாண் படிப்பு, ஆராய்ச்சி, பொறியியல், இயற்பியல், வேதியியல் போன்ற உயர் படிப்புகளுக்காக இஸ்ரேல் நாட்டிற்கு செல்வது வழக்கம். இதற்காக இங்குள்ள பல்கலைக்கழகங்கள் பலவும் இஸ்ரேல் நாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இஸ்ரேல் நாட்டிலுள்ள 2 வேளாண் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு செய்திருக்கிறது.
குறிப்பாக, நீர்வள தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஆய்வு, ரிமோட் சென்சார் (ட்ரோன்) தொழில்நுட்பம் போன்ற ஆய்வுகளை தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக, இப்பல்கலைக்கழகத்திலிருந்து பலரும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியில் உழவியல் துறை இணைப் பேராசிரியையாக பணிபுரியும் ராதிகா, சொட்டு நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள இஸ்ரேல் நாட்டிலுள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி சென்றார்.
இவர், திருச்சி கருமண்டபம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர். பேராசிரியை ராதிகா சென்ற சில தினங்களிலேயே காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கி விட்டனர். பதிலுக்கு இஸ்ரேலும் போரை தொடங்கி இருக்கிறது. இதனால், இஸ்ரேலில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் இருக்கும் பேராசிரியை ராதிகா, தான் பாதுகாப்பாக இருப்பதாக தனது கணவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து பேராசிரியையின் கணவர் ரமேஷ் கூறுகையில், ”நான் திருச்சி வேளாண் பல்கலை.யில் உழவியல் துறைத் தலைவராக இருக்கிறேன். எனது மனைவி ராதிகா, பயிற்சிக்காக இஸ்ரேல் சென்றார். அங்கு பயிற்சி தொடங்கிய சில நாட்களிலேயே போர் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ராதிகா இருக்கும் இடத்தில் இருந்து தாக்குதல் நடந்த பகுதி வெறும் 60 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. ராதிகாவுடன், பணி, கல்வி, வர்த்தகம் உட்பட பல்வேறு பணிகளுக்குச் சென்ற சென்னை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பத்திரமாக மீட்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, இஸ்ரேல் தலைநகரில் சிக்கி இருந்த 212 பேரை மத்திய பா.ஜ.க. அரசு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. இதில், ராதிகா இடம்பெறவில்லை. காரணம், இஸ்ரேல் தலைநகரில் இருந்து வெகுதூரத்தில் காஸாவுக்கு வெகு அருகில் ராதிகா இருக்கிறார். அங்கிருந்து அவரை இஸ்ரேல் தலைநகருக்கு அழைத்து வந்து, அதன் பிறகு இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும். ஆகவே, ராதிகாவை மீட்க மேலும் சில தினங்களாகலாம் என்று கூறப்படுகிறது.