இந்தியாவின் மதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளான, அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை. இஸ்ரோவில் பணிபுரியும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கலந்துகொண்டு பேசுகையில், “நமது நாட்டின் சிறந்த திறமைசாலிகளாக ஐ.ஐ.டி.யில் இருந்து வெளிவரும் பொறியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இஸ்ரோவில் சேர விரும்பவில்லை. இஸ்ரோவில் பணிபுரியும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே.
இந்திய அரசாங்கத்தின் உயர் தொழில்நுட்பக் கல்வியால் ஐ.ஐ.டி. மாணவர்கள் பெரிதும் பயனடையும்போது, அவர்கள் ஏன் இஸ்ரோ போன்ற அரசாங்கத்தால் நடத்தப்படும் அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய மறுக்கிறார்கள்? சிறந்த பொறியியல் திறமையாளர்கள் தேசத்திற்கு சேவை செய்வதை உறுதி செய்ய இந்திய அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை? கவர்ச்சியான ஐ.ஐ.டி.யில் உள்ளவர்களுக்கு அரசுத் துறை அறிவியல் வேலைகள் ஏன் கவர்ச்சிகரமானதாக இல்லை?
நம் நாட்டில் அரசுத் துறையில் வேலை தேடுவோர் இன்றளவும் அதிகளவில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தாலும், விடுமுறை, ஓய்வூதியம், கிராஜுவிட்டி, பி.எஃப். உள்ளிட்ட சலுகைகள் மற்றும் வசதிகள் காரணமாக அரசுத் துறையில் சேர விரும்புகின்றனர். ஆனால், ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோ வேலைவாய்ப்பை தேர்வு செய்வதில்லை.
இஸ்ரோவில் நிறைய காலியிடங்கள் இருக்கின்றன. தற்போது ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் பயின்ற பொறியாளர்கள் அல்லது பயின்று வரும் மாணவர்கள் இஸ்ரோவில் இணைய விரும்புவதில்லை. இஸ்ரோவில் சிறந்த திறமையான பொறியாளர்கள் வேண்டும் என்றும், இவர்கள் ஐ.ஐ.டி. போன்ற சிறந்த நிறுவனத்தில் இருந்து வரும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். ஆனால், ஐ.ஐ.டி.யில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியும் யாரும் சேரவில்லை.
ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே விண்வெளித் துறையை தேசிய அளவில் முக்கியமான வேலை வாய்ப்பாகக் கருதுகின்றனர். மீதமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பற்றி யோசிக்கக்கூட மறுக்கிறார்கள். இதற்குப் பின்னால் உள்ள காரணம் இஸ்ரோ வழங்கும் சம்பளம். இஸ்ரோ குழு, தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை அளித்து வருகிறது. தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை முறை பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கிய பிறகு, சம்பளம் குறித்த தகவல்களை கூறுகின்றனர்.
பொதுவாகவே, மாணவர்கள் உறுதியான மற்றும் நிறைவான சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இஸ்ரோவின் சம்பளம் பற்றிக் கேள்விப்பட்டதும், கிட்டத்தட்ட 60 சதவீத ஐ.ஐ.டி. மாணவர்கள் வேலை வாய்ப்பை நிராகரித்து விடுகின்றனர். ஐ.ஐ.டி.யில் தேர்ச்சி பெறும் அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடத்தும்போது, இஸ்ரோவில் உள்ள மூத்த அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்கிற தகவலும் தெரிவிக்கப்படுகிறது. இதைக் கேட்டவுடன் வேலைவாய்ப்பை நிராகரித்து விடுகின்றனர்” என்றார்.