இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் செப்டம்பர் 2023 க்கான ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரர் விருதை பெற்றார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் 480 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்களும் 3 அரை சதங்களும் அடங்கும். சராசரி 80 ரன்களாக உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 302 ரன்கள் குவித்தார். ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.
இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் கில்லின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இந்த தொடரில் மொகாலியில் நடந்த முதல் போட்டியில் 74 ரன்களும், அடுத்து நடந்த ஆட்டத்தில் 104 ரன்களும் கில் குவித்தார்.
முன்னதாக, இந்த விருதுக்கு சுப்மன் கில்லுடன், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த டேவிட் மாலன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேப் போன்று செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கையின் சாமரி அட்டபட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.