காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதில் சிக்கல் நிலவுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா தன்னாட்சி நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி காலை இஸ்ரேல் நாட்டின் மீது 7,000 ஏவுகணை வீசி கொடூரத் தாக்குதலை நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார்.
இஸ்ரேலுக்கு தங்களது பகிரங்க ஆதரவை அளித்திருக்கும் அமெரிக்கா, தனது நாசக்காரக் கப்பலையும் அந்நாட்டுக்கு உதவியாக அனுப்பி இருக்கிறது. மேலும், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் இஸ்ரேலுக்கு நேரடி பயணம் செய்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜோர்டான் சென்று அந்நாட்டு மன்னர் அப்துல்லாவையும், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸையும் சந்தித்தார். தொடர்ந்து, கத்தார் சென்ற பிளிங்கன், அந்நாட்டின் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான முகமது பின் அப்துல் ரஹ்மான அல் தானியை சந்தித்தார். அப்போது, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை பிளிங்கன் கூறுகையில், “ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களில் 1,300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், அந்நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதோடு, குழந்தைகள், முதியவர்களை சித்ரவதை செய்து எரித்திருக்கிறார்கள்.
அதேபோல, காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன ஆண்கள், பெண்கள், முதியோர், சிறுவர்கள், சிறுமிகள் என பாரபட்சமின்றி மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, காஸா நகர மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளைக்கூட செய்ய முடியவில்லை. கடுமையான சிக்கல் நிலவுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டு இராணுவத்தின் எச்சரிக்கைப்படி பாலஸ்தீனியர்களை தெற்கு காஸாவுக்கு செல்லவிடாமல் சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
எனினும், கத்தார் உள்ளிட்ட கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதேசமயம், இஸ்ரேலுக்கு தனது மக்களைப் பாதுகாப்பதற்கும், கடந்த 7-ம் தேதி நடந்தது மீண்டும் நடக்காமல் இருக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு உரிமையும், கடமையும் உள்ளது. இனி ஹமாஸுடன் வழக்கமான எவ்வித வணிகமும் கிடையாது என்பதை இப்பயணம் முழுவதும் எனது எல்லா உரையாடல்களிலும் நான் தெளிவாகக் கூறி வருகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய கத்தார் பிரதமர் ஷேக் முகமது, “கத்தாரைப் பொறுத்தவரை, இராஜதந்திர அணுகுமுறையில் போர் நிறுத்தம் கோருவது, பொதுமக்களைப் பாதுகாப்பது, சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது மற்றும் வன்முறையை இப்பிராந்தியத்தில் பரப்பாமல் தடுப்பது ஆகியவைதான். இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காஸா பகுதியில் நிலைமை மோசமடைந்திருக்கும் நிலையில், பாலஸ்தீனியர்களுக்குத் தேவையான உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன” என்றார்.