உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்றைய போட்டி பரம எதிரிகளாக உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு அகமதாபாத்துக்கு வந்திருக்கிறது.
முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோரின் பேட்டிங் அட்டகாசமாக இருந்தது. பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.
‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி மற்றும் ஹசன் அலியை தொடக்க கட்ட ஓவர்களில் சமாளிப்பது மிகவும் முக்கியம். அதை சாதுர்யமாக செய்து விட்டால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைவதற்கு வாய்ப்புள்ளது. அத்துடன் யாராவது ஒருவர் சதம் அடித்தால் 300-ஐ எளிதில் கடந்து விடலாம்.
கடந்த மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 128 ரன்னில் சுருட்டி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிப் பெற்றது.
இது நிச்சயம் இந்திய வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும். மேலும், உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை. 7 முறை போட்டுத் தாக்கிய இந்தியா அந்த எண்ணிக்கையை 8 ஆக வரலாற்றை தொடர்வார்கள் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது