காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில், இது வெறும் ஆரம்பம்தான். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிப்போம் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார்.
இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஹமாஸ் தீவிரவாதிகள், வான், கடல், தரை மார்க்கமாக இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். பின்னர், கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை ஈவு இரக்கமின்றி குருவியைச் சுடுவதுபோல சுட்டுக் கொன்றனர்.
இத்தாக்குதலில் சுமார் 1,300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கிறார்கள். மேலும், இஸ்ரேலிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதோடு, முதியோர் மற்றும் சிறுவர், சிறுமிகளை சித்ரவதை செய்தனர். இது தவிர, 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருக்கிறார்கள். எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் கடுமையான பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
முதலில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், நேற்று முதல் தரைப்படை மூலமும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்த சூழலில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது வெறும் ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையாக முடிப்போம். நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பரந்த சர்வதேச அளவிலான ஆதரவு இருக்கிறது.
நமது எதிரிகள் இப்போதுதான் விலை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் வெளிப்படையாகக் கூற முடியாது. ஆனால், இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் சொல்லிக் கொள்கிறேன். எங்களுக்கு நடந்த கொடுமையை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம். அளவற்ற சக்தியைக் கொண்டு எங்கள் எதிரிகளை எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறியிருக்கிறார்.