திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிகாரியைக் கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, திமுக நிர்வாகிகள் சக்திவேல் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மணல் கடத்தல் தொழில் செய்து வந்தனர். அவர்களை கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர் மகுடேஷ்வரன் ஆகியோர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஆனால், அதையும் மீறி அவர்கள் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர் மகுடேஷ்வரன் மற்றும் போலீசார் என 4 பேர் தடுக்க முயன்றுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகிகள், அவர்கள் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், நடந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.
இதனிடையே, சட்டம் ஒழுங்கு பற்றியோ, அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல், திமுகவினர் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற நிலைப்பாடு உள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.