மேட்டூர் அணையில் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. அதே போல் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை கைகொடுக்கவில்லை. மேலும் கர்நாடகா அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்கவில்லை.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த கோவில் மற்றும் கிறிஸ்துவ கோபுரங்கள் வெளியே தெரிந்தது.
அதோடு இல்லாமல் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம், பாளமாக நிலப்பரப்பு வெடித்து காணப்பட்டது. மேலும் பாறைகள் மற்றும் கற்களாக காட்சியளித்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10ஆம் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
ஆனாலும் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை வினாடிக்கு 15 ஆயிரத்து 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரத்து 260 கனஅடியாக குறைந்தது. மேலும் கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 38.60 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் அணையில் தற்போது 11.38 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7.61 அடி உயர்ந்து உள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதே அளவில் நீர்வரத்து இருந்தால் இன்னும் 2 வாரங்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிவிடும்.