ஆசியக் கண்டத்தில் ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று ரஷ்ய நாடாளுமன்றத் தலைவர் வாலண்டினா மத்வியென்கோ தெரிவித்திருக்கிறார்.
ஜி20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உச்சி மாநாடு (பி20) தேசியத் தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கியது. இம்மாநாடு இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. நேற்றைய முதல் அமர்வு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்கிற தலைப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலுடன் சாதனைகள் மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நடைபெற்றது.
இன்றைய 2-வது அமர்வு ஒரே பூமி நிலையான ஆற்றல் மாற்றம்-பசுமை எதிர்காலத்துக்கான நுழைவுவாயில் என்கிற தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தோனேஷியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, ஓமன், ஸ்பெயின், ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, துருக்கி, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய நாடாளுமன்றத் தலைவர் வாலண்டினா மத்வியென்கோ, இந்திய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெக்தீப் தங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின்போது, சட்டப் பரிமாணத்தில் சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்ததாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மேலும், ஜி20 நாடாளுமன்றத் தலைவர்கள் உச்சிமாநாட்டை (பி20) சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக ஜெக்தீப் தன்கருக்கு மாட்வியென்கோ நன்றி தெரிவித்தார். அப்போது, ஆசியாவில் ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக மாட்வியென்கோ தெரிவித்திருக்கிறார். இதுதவிர, ரஷ்யாவும், இந்தியாவும் பல நிலை இரகசிய அரசியல் உரையாடலை நடத்தி வருவதாகவும், இது இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான வழக்கமான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இச்சந்திப்பு குறித்து ஜெக்தீப் தன்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதிதாக உருவாக்கப்பட்ட நட்புக் குழுவைத் தொடங்குவது, நாடுகளுக்கு இடையே சிறந்த தொடர்புக்கு வழி வகுக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இருவருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்கள் வரலாற்று ரீதியாக மக்கள் உறவுகள் மற்றும் கலாச்சார உறவை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.