மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும், பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதேபோல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள்தான்.
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14-ம் தேதி வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது. மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது அக்டோபர் 14-ம் தேதி (இன்று) வருகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம் என்பதால், இந்த நாட்களில் சுபகாரியங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை.
மேலும், இந்துக்கள் முன்னோர் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் புனித நீர் நிலைகளில் நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள். அந்த வகையில், மகாளய அமாவாசையை தினமான இன்று, இந்துக்கள் நதிக்கரைகளில், கோயில் அருகே முன்னோருக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மகாளய அமாவாசை வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த மரியாதைக்குரிய மகாளய நாளில், துர்கா மாவை அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, ஞானம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்கிறோம். இந்த சிறப்பு சந்தர்ப்பம் தைரியம், நல்லிணக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக இருக்கட்டும். சுபோ மகாளயா!” என்று தெரிவித்திருக்கிறார்.
On this revered day of Mahalaya, we pray Maa Durga blesses everyone’s lives with strength, wisdom, and prosperity. May this special occasion be a beacon of courage, harmony and prosperity.
Shubho Mahalaya!
— Narendra Modi (@narendramodi) October 14, 2023