இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்திருக்கிறது. மேலும், தங்களது எச்சரிக்கையைத் தொடர்ந்து காஸா நகர மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை நிலைகுலையச் செய்த தீவிரவாதிகள், பின்னர் வான், கடல், தரை மார்க்கமாக ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் கண்ணில் படும் இஸ்ரேலியர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்வதோடு, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், சிறுவர்களின் தலையை துண்டித்தும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஏராளமான விமானங்களை அனுப்பி அசுரத் தனமான வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இதனால், காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
ஏற்கெனவே காஸாவில் இருந்த ஹமாஸ் தலைமையகத்தையும், மசூதியின் மையப் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களையும் அழித்த இஸ்ரேல் விமானப்படை, முக்கியத் தீவிரவாதத் தலைவரின் வீட்டையும் அழித்தது. இந்த சூழலில்தான், காஸா பகுதியில் ஹமாஸ் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தலைமையகத்தைக் குறிவைத்துத் தாக்கியது. இதில், விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து இஸ்ரேல் விமானப்படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாட்டு தலைமையகத்தைத் தாக்கின. இத்தாக்குதலின்போது, தீவிரவாதிகளை இயக்கிய காஸா நகரத்தின் விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டார். மேலும், ஒரே இரவில் நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதல்களில் இஸ்ரேல் ஊடுருவலுக்குத் தலைமை தாங்கிய ஹமாஸின் கமாண்டோ படைகளுக்குச் சொந்தமான டஜன் கணக்கான தளங்களையும் இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்தது” என்று தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் மற்றொரு பதவில், “காஸா பகுதி மக்கள் இஸ்ரேலின் எச்சரிக்கையைக் கேட்டு சரியானதைச் செய்கிறார்கள். பாலஸ்தீனிய குடிமக்கள் தெற்கே நகர்வைக் கண்டோம். மக்கள் எங்களின் எச்சரிக்கைக்கு செவிசாய்ப்பதையும், அவர்கள் புத்திசாலித்தனமான செயலைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “பொதுமக்கள் எங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் அவர்களை கொல்லவோ, காயப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. அவர்கள் போரினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வடக்குப் பகுதியை விட்டு தெற்குப் பகுதிக்கு இடம்பெயரும்படி எச்சரிக்கை விடுத்தோம். எங்களது இலக்கு ஹமாஸ் மற்றும் அதன் உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழிப்பதே. நாங்கள் ஹமாஸ் மற்றும் அதன் இராணுவத் திறன்களை சிதைத்து அடிப்படை நிலையை மாற்றுவோம். இதனால் ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் ஒருபோதும் இஸ்ரேல் மீதும், பொதுமக்கள் அல்லது வீரர்கள் மீதும் எந்த தாக்குதலையும் நடத்த முடியாது” என்றார்.