மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 16-ம் தேதி வடக்கு கொல்கத்தாவில் உள்ள சந்தோஷ் மித்ரா சதுக்கத்தில் ராமர் கோயில் கருப்பொருளான துர்கா பூஜை பந்தலை திறந்து வைக்கிறார்.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, துர்கா பூஜை கொண்டாட்டங்களை பா.ஜ.க. ஏற்பாடு செய்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தல்களைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வடக்கு கொல்கத்தாவில் உள்ள சந்தோஷ் மித்ரா சதுக்கத்தில் ராமர் கோவில் கருப்பொருளான துர்கா பூஜை பந்தலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். சந்தோஷ் மித்ரா சதுக்க பூஜை கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த தனித்துவமான பந்தல், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் சாஜல் கோஷ் கூறுகையில், “சந்தோஷ் மித்ரா சதுக்க பூஜையில் மாலை 4 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த துர்கா பூஜை சஜய் கோஷின் பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இப்பூஜை கொண்டாட்டத்தின் கருப்பொருள் ராமர் கோயில். அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளால் ஈர்க்கப்பட்டு இக்கருப்பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூஜை பந்தலை வரும் 16-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். இதற்காக, சந்தோஷ் மித்ரா சதுக்கத்தில் உள்ள பந்தல் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.