இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம், ஜனவரி மாதம் மத்தியில் லாக்ராஞ்ச் புள்ளியை (எல்-1) அடையும் என்று இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் இன்று தெரிவித்தார்.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய ஆதித்யா எல்-1 விண்கலம், செப்டம்பர் 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து 5 முறை உயர்த்தப்பட்டு சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக செய்து வருகிறது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சூரியனைப் பற்றிய விரிவான ஆய்வுக்கு வெவ்வேறு பேலோடுகள் உள்ளன. இவற்றில் 4 சூரியனில் இருந்து வரும் ஒளியைக் கண்காணிக்கும். மற்ற 3 பேலோடுகள் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களில் உள்ள சிட்டு அளவுருக்களை அளவிடும். ஆதித்யா எல்-1 பூமியிலிருந்து சூரியனின் திசையில் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் வைக்கப்படும். இத்தொலைவை 4 மாதங்களில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “ஆதித்யா எல்-1 நன்றாக வேலை செய்கிறது. தற்போது பூமியில் இருந்து லாக்ராஞ்ச் எல்-1 புள்ளிக்கு பயணிக்க கிட்டத்தட்ட 110 நாட்களாகும். அந்த வகையில், ஜனவரி மாதத்தின் மத்தியில் ஆதித்யா எல்-1, லாக்ராஞ்ச் எல்-1 புள்ளியை அடைந்துவிடும். இதன் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலத்தை, லாக்ராஞ்ச் எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தச் செய்வோம். இதுதான் ஒளிவட்ட சுற்றுப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய சுற்றுப்பாதை” என்றார்.
தொடர்ந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ பணி குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “ககன்யான் திட்டம் தொடர்பான சோதனை விண்கலம் டி-1 மிஷன் அக்டோபர் 21-ம் தேதி திட்டமிடப்பட்டிருக்கிறது. இது ககன்யான் திட்டத்தின் பணியாளர்கள் தப்பிக்கும் முறையை சோதித்தலாகும். ககன்யானில் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் மிகவும் முக்கியமான அமைப்பாகும். ராக்கெட்டுக்கு ஏதாவது நேர்ந்தால், நீங்கள் வெடிக்கும் ராக்கெட்டில் இருந்து குறைந்தபட்சம் 2 கி.மீ. தூரம் நகர்த்தி பணியாளர்களை காப்பாற்ற முடியும்.
எனவே, இச்சோதனையானது விமானத்தின் ஒரு நிலையில் பணியாளர்கள் தப்பிக்கும் அமைப்பை நிரூபிக்க உள்ளது. நாம் காண்பிக்கும் இந்த நிலை டிரான்சோனிக் நிலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு ஏவலையாவது நடத்துவோம். இச்சோதனை வாகனம் ஏவப்பட்ட பிறகு, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ககன்யான் ஆளில்லா விண்கலம் ஏவப்படும். ஆகவே, ஜனவரி மாதத்துக்கு முன்பு நீங்கள் குறைந்தது 4-5 ஏவுகணைகளைக் காண்பீர்கள்” என்றார்.