திமுகவிற்கு மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு எந்த வித தகுதியுமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் தனது ”என் மண் என் மக்கள்” நடைபயணத்தை நாளை தொடங்க உள்ளார். நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவினாசியில் காலையிலும், மேட்டு மேட்டுப்பாளையத்தில் மாலையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னையிலிருந்து அண்ணாமலை விமானம் மூலம் கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவா்,
திமுக சார்பில் நேற்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடத்தி உள்ளனர். அதில் மகளிர் உரிமை குறித்து பேசியுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு மகளிர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து திமுகவினர் அங்கிருந்த காவல்துறையினரை மிரட்டி உள்ளனர். இப்படி காவல்துறையினரையே மிரட்டும் திமுகவினர் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு எந்த வித தகுதியுமில்லை.
பிரதமர் மோடி எந்தவித பின்னணியும் இல்லாமல் மகளிருக்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.
சென்னையில் டிசம்பர் 31ம் தேதி நடந்த மகளிர் மாநாட்டில், பெண் காவலரிடம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தவறாக நடந்து கொண்டார்கள். இதுதான் இவர்கள் மகளிரிடம் காட்டும் லட்சணம் என தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் தங்களது கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில் குறிக்கோளாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஸ்.இளங்கோவன் தெரிவித்த கருத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜக எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியை கேள்வி கேட்பது எங்களின் கடமை. அதற்கேற்றவாறே நாங்கள் கேள்விகணைகளை தொடுத்து வருகிறோம். அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். தொடர்ந்து நாங்கள் கேட்டு கொண்டே இருப்போம்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது நடந்த சம்பவத்தில், விளையாட்டை விளையாட்டை பார்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார், என கேள்வி எழுப்பினார்.
ஒற்றை ஆட்சி குறித்து கானல் நீர் போல் ஒரு கனவை கண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயந்து கொள்கிறார். தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்வானதி சீனிவாசன் பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும். கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள்.
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது மட்டுமே எனது குறிக்கோள். 5 மாநில தேர்தல்களில் இண்டியா கூட்டணி முழுவதும் சேர்ந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு ஆளுநர் கையெழுத்து போட மாட்டார் என நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பீக் அவர் மின் கட்டணத்தால் இங்குள்ள தொழிற்சாலைகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தொழிற்சாலைகளை குழியில் போட்டு மூடும் வேலையை அரசு பார்த்து வருகிறது என தெரிவித்தார்.