இதுவரை வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், தற்போது தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருப்பாதல், சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.
காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது அறிவிக்கப்படாத போரைத் தொடங்கினர். ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை மற்றும் தரைவழித் தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போரை அறிவித்த இஸ்ரேல், விமானப்படை மூலம் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் இருவர் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் 200 பேர் உட்பட 1,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இஸ்ரேல் தற்போது தரைவழித் தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல்-காஸா எல்லையில் காஸா பகுதியை நோக்கி பீரங்கிகளையும், டாங்கிகளையும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான முழு தரை தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராகி இருப்பது தெரிகிறது. காஸா எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் இந்த டாங்கிகள் மூலம் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் காஸா பகுதியை நோக்கி குண்டுகளை வீசுவதைக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதேபோல, வீரர்கள் பீரங்கி குண்டுகளை ஹோவிட்சர்களில் ஏற்றுவதையும் காண முடிகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “காஸா பகுதியில் பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் நடந்து வரும் போரின், அடுத்தகட்ட நகர்வுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தயாராகி வருகிறது. எனவே, காஸாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் மக்கள் தெற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு வலியுறுத்தி இருக்கிறோம். அவ்வாறு வெளியேற விரும்பாதவர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் நாங்கள் பெரும் பலத்துடன் தாக்குவோம்” என்று கூறுயிருக்கிறார்.
மேலும், ஹகாரி கூறுகையில், “எங்களது தாக்குதலால் ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் அழுத்தத்திலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். எனவே, பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். காரணம், தீவிரவாதிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் காஸா நகரில் வீடுகளுக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப் பாதைகளிலும், பொதுமக்களின் வீடுகளிலும் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் மக்களை மீட்கவும் காலாட்படை மற்றும் டாங்கிகள் காஸா பகுதிக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் பதிலடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.