தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது.
ரயில்களில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்.பி.எஃப்) 25 பேர் கொண்ட குழு இன்று தில்லியில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் – 21.09 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தில் பங்கேற்றது.
மாரத்தான் பாதையில், ஆர்பிஎப், வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பதாகைகளை காண்பித்ததுடன், ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோரினர்.
இந்திய ரயில்வே கட்டமைப்பில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆர்பிஎஃப்-ன் பல்வேறு முன்முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஓட்டத்தின் நோக்கமாகும்.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பெண் ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் பரந்த ரயில்வே கட்டமைப்பு முழுவதும் செயல்படும் “மேரி சஹேலி” எனப்படும் பெண்கள் பாதுகாப்புக் குழுக்கள், நீண்ட தூர ரயில்களில் தனியாக பயணிக்கும் எண்ணற்ற பெண்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கி வருகின்றன.
ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆர்பிஎஃப் பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
2023 ஆம் ஆண்டில், ஆர்பிஎஃப் வீரர்கள் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். ரயில்களில் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து 862 பெண்களை மீட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆபத்தில் இருந்த 2,898 ஆதரவற்ற சிறுமிகளையும் அவர்கள் மீட்டுள்ளனர். மேலும், 51 சிறுமிகள் மற்றும் 6 பெண்களை கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்டுள்ளனர்.
ரயில் பயணங்களின் போது 130 தாய்மார்களின் பிரசவம் தொடர்பான பணிகளில் ஆர்பிஎஃப் பெண் ஊழியர்கள் உதவியுள்ளனர். 1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து பயணிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்பிஎஃப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.