உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அதேபோல் மாறிவரும் உணவுப் பழக்கம் இதனால் உருவாகும் உடல் குறைபாடு மற்றும் வாழ்க்கை முறை ஆகிய விஷயங்களை சுட்டிக்காட்ட இது ஒரு பொன்னான நாள் என்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுநர்கள்.
அந்தவகையில், உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945 யில் அக்டோபர் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவானது. மேலும், இந்த நாளில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவினை ஏற்றுமதி , இறக்குமதி என வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் நடைமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
1979 முதல், உணவு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1981-ம் ஆண்டு முதல், உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை கொண்டு கொண்டாடப்படுகிறது. இதில் பெரும்பாலான கருப்பொருள்கள் விவசாயத்தைச் சுற்றியே உருவாக்கப்படும். ஏனெனில் விவசாயத்தில் முதலீடு செய்தால் மட்டுமே உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நோக்குடன் இப்படி செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், ‘ தண்ணீரே உயிர், தண்ணீரே உணவு’ . வருங்காலத்துக்கான தண்ணீரின் தேவை மற்றும் அதை இப்போதிலிருந்தே சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை இந்த கருப்பொருள் கொண்டுள்ளது.
உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரேநாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்குவதைத் தவிர்க்கலாம். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கலாம். வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியின்றி தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம்.