ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கும், இஸ்ரேலின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் கோழைகள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பாலத்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி அண்டை நாடான இஸ்ரேல் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயக்கம் காட்டி வருகிறது. எனவே, காஸாவில் இருக்கும் பாலஸ்தீனியர்களை தெற்கு பகுதிக்கு இடம் பெயருமாறு இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. எனினும், மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஹமாஸ் தீவிரவாதிகள் ஒரு கோழைகள். அவர்கள் பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைமையகத்தை பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அமைக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதைத் தடுக்கிறார்கள். எனினும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க இஸ்ரேல் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனது பார்வையில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அனைத்து பாலஸ்தீனியர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இஸ்ரேல் நிச்சயமாக ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும். அதேசமயம், காஸாவை கைப்பற்ற வேண்டும் என்று இஸ்ரேல் நினைத்தால் அது தவறு. வடக்கே ஹிஸ்புல்லா தீவிரவாதிகளையும், தெற்கே ஹமாஸ் தீவிரவாதிகளையு இஸ்ரேல் கண்டிப்பாக அழித்தாக வேண்டும்.
கடந்த 1,000 ஆண்டுகளாக யூதர்கள் மீதான துஷ்பிரயோகம், தப்பெண்ணமும் அடக்கடவுளே, யூதர்களைத் துடைத்தெறிய முயல்கின்றனர். இது தவறு, தவறு. இது நான் கொண்டிருக்கும் ஒவ்வொரு மதக் கொள்கையையும், ஒவ்வொரு வழியையும், என் தந்தை எனக்குக் கற்பித்த ஒவ்வொரு கொள்கையையும் மீறுகிறது. ஹமாஸ் ஒழிக்கப்பட வேண்டும். அதேசமயம், இரு தரப்புப் பிரச்சனைக்கான தீர்வுக்கு கண்டிப்பாக ஒரு பாதை இருக்க வேண்டும். ஆனால், இப்போதைக்கு இல்லை” என்றார்.
மேலும், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஈரானின் தொடர்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தெளிவான ஆதாரம் இல்லை என்றார். “ஈரான் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஆதரிக்கிறது. அதற்காக நான் அதை அர்த்தப்படுத்தவில்லை. ஆனால், இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் முன்கூட்டியே அறிந்திருந்ததா, தாக்குதலைத் திட்டமிட உதவியதா என்பதற்கான எந்த ஆதாரமும் தற்போது இல்லை” என்றார்.
இதனிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். காணாமல் போன அமெரிக்கர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவர்களின் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வர முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.
மற்றொரு பதிவில், “உலகத் தலைவர்கள் மற்றும் பிராந்திய பங்காளிகளுடன் இணைந்து இஸ்ரேலை ஆதரித்தல், இராணுவத் தடுப்பை வலுப்படுத்துதல், காஸாவில் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்தல், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யூத, அரேபிய மற்றும் முஸ்லீம் சமூகங்கள் உட்பட அமெரிக்கக் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலைக் கண்காணித்தல் அவசியமாகும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.