தமிழகம் முழுவதும் நடந்த, ‘லோக் அதாலத்’ எனும் மக்கள் நீதிமன்றத்தில், 8,092 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு186.73 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுத்தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு செயல்தலைவருமான எஸ்.வைத்தியநாதன், உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மூத்த நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் ஆகியோரது அறிவுறுத்தல்படி, குடும்பப் பிரச்னைகள், காசோலை வழக்குகள், விபத்து தொடர்பான நிலுவை வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் டி.பரத சக்ரவர்த்தி, பி.தனபால், சி.குமரப்பன், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் நான்கு அமர்வுகளும், மதுரை கிளையில் நீதிபதிகள் விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி தலைமையில் இரண்டு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவில், 194 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 8,092 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு ரூபாய் 186.73 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மட்டும், 96 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, 12.69 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசிர் அகமது, சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் சுதா ஆகியோர் தெரிவித்தனர்.