மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று நவராத்திரி திருவிழா தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி திருவிழாவில் முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது நவராத்திரி திருவிழாவாகும். அம்மன் சன்னதியிலுள்ள இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்படும்.
தெற்குப்புற மண்டபம் தீத்தியப்பச்செட்டி என்பவரால் கி.பி.1565-ஆம் ஆண்டு கட்டப்பட்டது என கோவில் வரலாறு கூறுகிறது. நவராத்திரி விழாவின் போது கொலு பொம்மைகள் இந்த மண்டபத்தில் வைக்கப்படுவதால் இது கொலு மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.
நவராத்திரி விழா என்பது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என ஒவ்வொரு சக்திக்கும் மூன்று நாட்கள் என மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த விழா திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்மன் பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சிதருவாள்.
முதல் நாள் ராஜராஜேஸ்வரி, 2-ஆம் நாள் அர்ஜீனனுக்கு பாசுபதம் அருளியது, 3-ஆம் நாள் ஏக பாத மூர்த்தி, 4-ஆம் நாள் கால் மாறி ஆடிய படலம், 5-ஆம் நாள் தபசு காட்சி, 6-ஆம் நாள் ஊஞ்சல், 7-ஆம் நாள் சண்டேசா அனுக்கிரஹ மூர்த்தி, 8-ஆம் நாள் மகிஷாசுரமர்த்தினி, 9-ஆம் நாள் சிவபூஜை, என அம்மன் காட்சி அளிப்பார்.
இதில் மகிஷனை அம்மன் கொன்ற வெற்றி நாள்தான் விஜயதசமியாக 10-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 108 வீணை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெறும்.
நவராத்தி திருவிழாவின் முதல்நாளான இன்று மீனாட்சி அம்மன், ராஜராஜேஸ்வரி திருக்கோலத்தில் காட்சியளித்தார். கொலு மண்டபத்தின் நவராத்திரி கொலுவைக் கண்டு களித்த பக்தர்கள், அம்மனின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தையும் கண்டு அருளாசி பெற்றுச் சென்றனர். நவராத்திரி விழா நடைபெறும் 10 நாட்களும் பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள் நடைபெறும்.