நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத்தின் காந்திநகரில் நடந்த ‘கேசரிய கர்பா’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, காந்திநகரில் உள்ள சஹாய் அறக்கட்டளையால் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் மாதிரி, அறக்கட்டளை சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கேசரிய கர்பா நிகழ்ச்சியை உற்சாகமாகக் கண்டு களித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 நாள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு 13-ம் தேதி இரவு புறப்பட்டுச் சென்றார். 14-ம் தேதி காந்திநகர் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடியவர், பின்னர் அக்குழந்தைகளை கேமிங் மையத்துக்கு அழைத்துச் சென்று, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். பின்னர், அன்றையதினம் இரவு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.
15-ம் தேதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களைத் திறந்து வைத்தவர், குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் கிளர்ச்சியின்போது ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மான்சாவைச் சேர்ந்த 12 புரட்சியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட “சமாவ் ஷஹீத் நினைவகத்தை” திறந்து வைத்து பேசுகையில், சமாவ் கிராமத்தில் உள்ள ஷஹீத் நினைவிடம் தேசபக்தியை வளர்க்கும் புனித இடமாக இருக்கும் என்றார்.
மேலும், ஒரு நூலகத்தையும் திறந்து வைத்தவர், “எனது ஆளுமையைக் கட்டியெழுப்பியதில் புத்தகங்கள் சிறப்புப் பங்காற்றியுள்ளன. ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாகிறது. அது ஒருவரின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிய வாய்ப்பளிக்கிறது” என்று கூறினார். 3 நாள் பயணம் முடிந்து அமித்ஷா இன்று இரவு டெல்லி திரும்புவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.