அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சிலர் மீது கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில், வருமான வரித் துறையினர் 12.10.2023 அன்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தில்லி ஆகிய மாநிலங்களில் சுமார் 55 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனைகளின் போது ஏராளமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததாரர்கள் தங்களது வருமானத்தைக் குறைத்துக்காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையின் போது, வரி செலுத்துவோர், துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் சிலருக்கு சொந்தமான இடங்களில் இருந்து, கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்யப்படாத பெரிய அளவிலான கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ. 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.