தொலைபேசியில் பேசும்போது ‘எதிர்பக்கத்தில் பேசுபவருக்கு தெரியாமல், உரையாடலை பதிவு செய்வது, தனிமனித சுதந்திர உரிமையை மீறும் செயல்’ என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தைச் சேர்ந்த, 38 வயது பெண், தன் 44 வயது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2019ல் தொடரப்பட்ட இந்த வழக்கில், தன் மனைவியுடன் நடந்த உரையாடல்களை தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும், அதை விசாரித்து அதனடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும் படியும், அந்தக் கணவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை குடும்பநல நீதிமன்றம் ஏற்றது.
இதை எதிர்த்து அந்த பெண் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தன் உத்தரவில், ” தன் மனைவிக்கு மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக காட்டுவதற்கு, இந்த உரையாடல் பதிவுகளை பயன்படுத்த கணவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜீவனாம்சம் அளிக்க மறுப்பது அவரது நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொலைபேசியில் எதிர்பக்கத்தில் பேசுபவரின் அனுமதி பெறாமல், அவருக்கு தெரியாமல், அந்த உரையாடலை பதிவு செய்வது, தனிமனித உரிமையை மீறும் செயலாகும். அதனால், இந்த உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்யும் குடும்பநல நீதிமன்றத்தில் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.