முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷர்தா கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் கிஷன்கங்கா ஆற்றின் கரையில் தீட்வால் என்கிற இடத்தில் சாரதா தேவி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் கி.மு. 237-ல் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களாலும், அந்நியப் படையெடுப்பு காரணமாகவும் இக்கோவில் பலமுறை சேதமடைந்தது.
இக்கோவில் கடைசியாக 19-ம் நூற்றாண்டில் குலாப் சிங் மகாராஜா என்பவரால் சீரமைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த சாரதா கோவில்தான் வணங்கும் கடவுளாக இருந்திருக்கிறது. மேலும், இக்கோவிலில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்திருக்கிறது. இந்த நூல்களை படிப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.
1947-ம் ஆண்டுக்குப் பிறகு இக்கோவிலில் எவ்வித பூஜைகளும் நடந்ததில்லை. ஆகவே, இக்கோவிலை சீரமைத்துத் தருமாறு இந்து பண்டிட்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மத்திய பா.ஜ.க. இக்கோவில் சீரமைப்புப் பணியைத் தொடங்கியது. இப்பணி முடிந்து, கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், இக்கோவிலில் முதல் முறையாக நவராத்திரி பூஜைகள் நடைபெற்றிருக்கிறது. இதுதான் ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆண்டின் தொடக்கத்தில் சைத்ரா நவராத்திரி பூஜை நடத்தப்பட்டது.
தற்போது, ஷர்தியா நவராத்திரி பூஜையின் மந்திரங்கள் சன்னதியில் ஒலிக்கின்றன. புனரமைப்புக்குப் பிறகு 2023 மார்ச் 23-ம் தேதி கோவிலை தாம் மீண்டும் திறந்தது அதிர்ஷ்டம். இது பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது நாட்டின் ஆன்மிக மற்றும் கலாச்சார சுடர் புத்துயிர் பெறுவதையும் குறிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
It is a matter of profound spiritual significance that for the first time since 1947, the Navratri pujas have been held in the historic Sharda Temple in Kashmir this year. Earlier in the year the Chaitra Navratri Puja was observed and now the mantras of the Shardiya Navratri puja… pic.twitter.com/xWzEfagvPx
— Amit Shah (@AmitShah) October 16, 2023