பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்து முடிந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அந்த போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் ரசிகர்களுக்கு சிறிதளவு ஏமாற்றம் உள்ளது.
மேலும் இரு அணிகள் விளையாடிய கடந்த சில ஆட்டங்கள் ஒரு தலைப்பட்சமாக முடிவடைந்து விடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எளிதாக இந்தியாவை வென்ற நிலையில் அதன் பிறகு நடைபெற்ற பெரும்பாலானப் போட்டிகள் இந்தியா பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி விட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், ” ஆதிக்கம் என்று சொல்வதை விட அடித்து நொறுக்கியது என்ற வார்த்தையை பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். முன்பெல்லாம் இந்த வார்த்தையை இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நாம் பயன்படுத்தவே மாட்டோம். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டிகளில் கண்டிப்பாக இதுபோன்ற முடிவுகள் கிடைக்கவே கிடைக்காது.
பல வருடங்களுக்கு முன்பு தான் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தான் இந்தியாவை தொடர்ந்து வீழ்த்தியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனினும் கிரிக்கெட்டுக்கு இது நிச்சயம் நல்லது கிடையாது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றாலே அதில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நாம் அனைவரும் சொல்லி வருவோம். ஆனால் கடந்த சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் எல்லாம் எந்த ஒரு சவாலும் இன்றி ஒரு தலைப் பட்சமாகவே முடிவடைந்து விடுகிறது.
இரு அணிகளையும் ஒப்பிட்டால் நிறைய வித்தியாசம் ஏற்படுகிறது. எந்த ஒரு கேப்டனுக்கும் பும்ரா, குல்தீப் யாதவ்போன்ற வீரர்கள் இருந்தால் அது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். ஏனென்றால் அவர்கள் 20 ஓவர்களை, எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் பந்து வீசுவார்கள். அதே போன்று பும்ராவை ஷாகின் ஆப்ரிடியுடன் ஒப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பும்ரா மதியம் 2 மணிக்கு கடும் வெயிலில் பந்து வீசி, முதல் நான்கு ஓவர்கள் ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் ஷாகின் ஆப்ரிடி அப்படி இல்லை ” என்று கம்பீர் கூறியுள்ளார்.