இந்தியா அனுப்பும் செயற்கைக்கோள்கள் மனிதக் குலத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, சந்திரயான் வெற்றிக்கு பின், இந்தியாவைக் கடந்து, உலக அளவில் நிலவை அனைவரும் திரும்பிப் பார்க்கக்கூடிய தருணமாக அமைந்தது. நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது சாதனையாகும்.
மற்ற நாடுகளைப் பின்பற்றி நாம் நிலவுக்குச் செல்லவில்லை. நிலவு சுற்றுவதைப் பின்பற்றியே நாம் செல்கிறோம். நாம் தனித்துச் செயல்படுவதால், குறைந்த செலவில் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறோம்.
நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனிதனுக்கும், நிலவில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிவித்து இருக்கிறோம்.
1950 முதல் 1970 காலகட்டத்தில், பல்வேறு நாடுகளின், 100 விண்கலங்கள் நிலவிற்குச் சென்றன. மற்ற நாடுகள் பல மில்லியன் டாலர் செலவு செய்தும், நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் குறைந்த செலவில் கண்டறிந்து உள்ளோம்.
நாம் அனுப்பும் செயற்கைக்கோள், மனிதக் குலத்திற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. பருவநிலை மாற்றம், மழை, புயல், வெயில் போன்றவற்றை முன்கூட்டியே அறிய முடிகிறது. செயற்கைக் கோள்கள், மக்களின் நலனுக்காகவே உள்ளன.
மேலும், அதிகப்படியான ஏ.டி.எம்., இயந்திரங்கள் உள்ள நாடாக நம் நாடு உள்ளது. அதற்குச் செயற்கைக்கோள்கள் உதவி புரிகின்றன. கொரோனா காலத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்குச் செயற்கைக்கோள்கள் உதவின என்று கூறினார்.