மின்சார வாகனங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு ev-ரெடி இந்தியா (evreadyindia.org) என்ற புதிய இணையதளத்தை, டெல்லியில் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்.
இது தொழில் துறை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட கட்டணமில்லா டிஜிட்டல் தளமாகும். இது தற்போதைய மின்சார வாகனப் பயன்பாடு, முன்னறிவிப்புகள், பேட்டரி தேவை, சார்ஜிங் நடைமுறைகள் மற்றும் சந்தை வளர்ச்சி தொடர்பான தகவல்களை வழங்குகிறது. இந்த தளத்தில் தொழில்துறை, மின்சார வாகனங்களின் பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
2022-ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 90 ஆயிரத்து 550 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையானதாகவும், 2030 ஆம் ஆண்டில் இது ஒரு கோடியே 39 இலட்சமாக உயரும் எனவும், ஈவி-ரெடி இந்தியா (evreadindia) கணித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், “எதிர்காலம் மின்சார மயமானதாக இருக்கும் என்றும், இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.
இந்தியா மின்சார வாகனப் போக்குவரத்திற்கு மாறுவது மிகவும் அவசியம். நாடு 5-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு எரிசக்தி சுதந்திரம் முக்கியமானது. கரியமிலவாயு உமிழ்வைக் குறைக்க போக்குவரத்தை மாசுபாடு இல்லாத முறைக்கு மாற்றுவது அவசியம்.
கரியமிலவாயு வெளியேற்றத்தில் போக்குவரத்து 18 சதவீதம் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். இதைக் குறைக்க அரசு மின்சார வாகனங்களைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இதுதான் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான நோக்கம் என அவர் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களைப் பற்றி பரவலாக பேசத் தொடங்குவதற்கு முன்பே, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மின்சார வாகனங்களில் மின்னேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசு https://evyatra.beeindia.gov.in/ என்ற தகவல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும், இதில் மின்னேற்ற நிலையங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்” என்றும் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.