தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது.
அதன்படி, தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை அம்மாநில காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தெலங்கானாவில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அதனை மீறி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் ஹைதராபாத்தில் கட்சித் தொண்டர்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி போத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்துட் பாபுரோவுக்கு சீட் தர மறுத்ததையடுத்து, அவர் இன்று காலை ரேவந்த் ரெட்டியைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.