ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடலின் போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் குருவிகளை சுடுவதுபோல சுட்டுக் கொன்றனர். மேலும், சிறுவர்கள், முதியவர்களின் தலைகளை துண்டித்தும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தற்போது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் பதிலடியில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட இரண்டு மடங்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஸா நகர பலி 3,000-த்தை தாண்டி விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இஸ்ரேல் இராணுவத்திடம் தப்பிப்பதற்காக அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் ஓயமாட்டோம் என்று நெதன்யாகு தெரிவித்ததாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கொடூர கொலைகாரர்களால் இஸ்ரேல் பலத்த சேதங்களை சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணமான ஹமாஸ் தீவிரவாதிகளையும், அந்த அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக திறனையும் அழிக்கும் வரை தாக்குதல் தொடர்ந்து நடக்கும். ஹமாஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறது.
அதேபோல, ரஷ்ய அதிபர் மற்றும் இஸ்ரேல் அதிபர் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தும் வகையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் – காஸா இடையே வன்முறை மேலும் தீவிரமடையாமல் இருக்க ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இரு தரப்புக்கும் இடையேயான இத்தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் அதிபர் புடின் விளக்கிக் கூறினார். இஸ்ரேலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை அதிபர் புடின் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.