ரயில்வேஸ் அணிக்காக, சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் ஆடிய அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில், இந்தியாவின் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடித்து 12 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தார்.
அந்த சாதனையை 16 ஆண்டுகள் கழித்து நேபாள அணி வீரர் தீபேந்திரா கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சர்வதேச அளவில் 9 பந்துகளில் அரைசதம் அடித்து அந்த சாதனையை முறியடித்து இருந்தார்.
இதையடுத்து இந்திய அளவில் அசுதோஷ் சர்மா, ரயில்வேஸ் – அருணாச்சல் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே ஆன டி20 போட்டியில் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் ரயில்வேஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் உபேந்திரா யாதவ் 51 பந்துகளில் 103 ரன்கள் குவித்த நிலையில், அசுதோஷ் சர்மா கடைசி ஓவர்களில் ரன் வேட்டை நடத்தினார். அவர் 11 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின் 12வது பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரயில்வேஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 246 ரன்கள் குவித்தது.
அசுதோஷ் சர்மா 1 பௌண்டரி மற்றும் 8 சிக்ஸ் அடித்து இருந்தார். மேலும் இவர் சந்தித்த 12 பந்துகளில் 9 பவுண்டரி அடித்து இருப்பதும் முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய அளவில் மிக வேகமாக அரைசதம் அடித்த வீரர் அசுதோஷ் சர்மா தான். இவர் அதிக அனுபவம் இல்லாத வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர், இதுவரை 9 உள்ளூர் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். 8 இன்னிங்க்ஸில் 236 ரன்கள் சேர்த்துள்ளார். 3 அரைசதம் அடித்துள்ளார். இப்படி அனுபவம் குறைந்த வீரர் யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து இருப்பது இரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.