கர்நாடக மாநில காவல்துறையால், கடந்த 13 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த், கடந்த 2011-ஆம் ஆண்டு, சட்ட விரோதமாகக் கூடுவது, பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியரைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவூர் தட்சிண கன்னடா காவல்துறையால் தேடப்பட்டு வந்தார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக தேடியும் கிடைக்காததால், தேடப்படும் குற்றவாளியாக மங்களூர் மாநகர காவல்துறை அறிவித்தனர். இதனை அடுத்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிரசாந்த் மீது, கடந்த 2016-ஆம் ஆண்டு, தட்சிண கன்னடா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், குவைத்தில் இருந்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த விமானத்தில், 13 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி பிரசாந்தும் வந்துள்ளார். அப்போது, பிரசாந்தின் பாஸ்போர்ட் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் கணினியில் பரிசோதித்தபோது, இவர் கர்நாடக மாநிலம் மங்களூர் மாநகர காவல் ஆணையரால், கடந்த 13 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தனர். அவரை தடுத்து நிறுத்தி, விமான நிலைய காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அதிகாரிகள் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மங்களூர் மாநகர காவல் ஆணையரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.