ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டி சென்னையில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதுவரை நியூசிலாந்து அணி விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றிப் பெற்றுள்ளது.
அதுப்போன்று, அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த ஆப்கானிஸ்தான், கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. அதே உத்வேகத்தில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
நியூசிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இல்லாவிட்டாலும் டாம் லாதம், அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். நடப்புத் தொடரில் இதுவரைத் தோல்வியையே சந்திக்காத அணிகளில் நியூசிலாந்து அணியும் உள்ளது.
மறுபக்கம் சுழற்பந்துவீச்சை தனது முதன்மை ஆயுதமாக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் போட்டி நடைபெறுவதால், ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் நியூசிலாந்திற்கு கடும் நெருக்கடி தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த இரண்டிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணியே வெற்றிப் பெற்றுள்ளது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் நியூசிலாந்து அணி 74% வெற்றி பெரும் என்றும் ஆப்கானிஸ்தான் அணி 26% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.