நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
உள்நாட்டில் விலை உயர்வைத் தடுக்கும் வகையிலும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், குறைந்தபட்ச வரி விதிப்பின் மூலம் அரிசி ஏற்றுமதியை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதியது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசி மீது 20 சதவீத வரி விதிப்பு செய்தது. அப்போது, இந்த வரி விதிப்பு அக்டோபர் 16-ம் தேதி நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென கடந்த வாரம் 2024 மார்ச் 31-ம் தேதிவரை இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது.
இதன் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து, மேற்கண்ட இரு நாடுகளுக்கு மட்டும் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளித்திருந்தது.
மேலும், ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும்போது, மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும், அவர்களின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேபாளம், பங்களாதேஷ், சீனா, கோட் டி ஐவரி, டோகோ, செனகல், கினியா, வியட்நாம், ஜிபூட்டி, மடகாஸ்கர், கேமரூன் சோமாலியா, மலேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்கும்படி கேட்டுக் கொண்டன.
இதைத் தொடர்ந்து, நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 7 நாடுகளுக்கு வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதிகள் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத அரிசியை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் நாடும் ஒன்று. ஏற்கெனவே, 2022 செப்டம்பரில் இந்தியா உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. பின்னர்,நவம்பர் மாதம் தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.