காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்தான் என்று கூறியிருக்கும் இஸ்ரேல், அதற்கான வீடியோ காட்சி ஆதாரங்களையும் வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற நகரம் காஸா. இந்நகரத்தின் வடக்குப் பகுதியான காஸா முனை ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இத்தீவிரவாதிகள் தவிர, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகளும் காஸாவில் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் இணைந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தினர். இதற்கு பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள் உட்பட இதர அமைப்புகளும் உதவி புரிந்து வருகின்றன. அதேசமயம், இஸ்ரேலும் கடுமையான பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக, ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும், பொதுமக்களின் குடியிருப்பு பகுதியிலேயே ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்களும் இருப்பதால், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அப்பாவி மக்களும் பலியாக வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் பல்வேறு முகாம்களையும் இஸ்ரேல் விமானப்படை தரைமட்டமாக்கி இருக்கிறது. அதேபோல, முக்கியத் தீவிரவாதத் தலைவர்கள் சிலரையும் கொன்றிருக்கிறது.
12-வது நாளாக இன்றும் போர் நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இத்தாக்குதலை இஸ்ரேல் இராணுவம்தான் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால், இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று இஸ்ரேல் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறது. எனினும், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது பழிசுமத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று கூறியிருக்கும் இஸ்ரேல், அதற்கான ஆதாரமாக பல வீடியோ காட்சிகளையும் வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மருத்துவமனைகள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் இலக்காக அவை ஒருபோதும் இருந்ததே இல்லை. இத்தாக்குதல் எங்கிருந்து நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இச்சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். பயங்கரவாத அமைப்பு ஒரு தகவலைப் பகிரும் போது அதை எச்சரிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, இஸ்ரேல் பிரதமரின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகெவ் கூறுகையில், “இஸ்ரேல் இராணுவத்தின் டார்கெட்டாக ஒரு போதும் மருத்துவமனைகள் இருந்ததே இல்லை. தற்போது வரை கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அது ஹமாஸ் அனுப்பிய ஏவுகணையைப் போலவே இருக்கிறது.
ஹமாஸ் அனுப்பும் ஏவுகணைகளில் சராசரியாக 33% ராக்கெட்டுகள் காஸா பகுதியிலேயே விழுந்துவிடுவதை கடந்த காலங்களிலேயே நாம் பார்த்திருக்கிறோம். அப்படியொரு சம்பவம்தான் காஸா மருத்துவமனை தாக்குதலிலும் நடந்திருக்கலாம். காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடந்த அதே நேரத்தில்தான் மத்திய இஸ்ரேலைக் குறிவைத்து ஹமாஸ் ஏவுகணையை வீசி இருந்தது.
அப்போது, டெல் அவிவில் சைரன் அலர்ட் கூட வந்தது. ஹமாஸ் படைதான் எங்களை நோக்கி ஏவுகணையை அனுப்பியது. ஆனால், அந்த ஏவுகணை இஸ்ரேலை தாக்கவில்லை. அப்படியானால் அந்த ஏவுகணை எங்கே போனது? எதைத் தாக்கியது என்பதே எங்களது கேள்வி. இஸ்ரேல் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்கிற கருத்தை உலகெங்கும் பரப்ப ஹமாஸ் விரும்புகிறது. எனவே, இத்தகவலை நாம் எச்சரிக்கையுடன்தான் அணுக வேண்டும்” என்றார்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “காஸாவின் அல் அஹில் மருத்துவமனையைத் தாக்கிய ஏவுகணை குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய ஜிஹாத் (ஹமாஸ்) அமைப்புதான் பொறுப்பு. எங்களிடம் ஆதாரம் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
An analysis of IDF operational systems indicates that a barrage of rockets was fired by terrorists in Gaza, passing in close proximity to the Al Ahli hospital in Gaza at the time it was hit.
Intelligence from multiple sources we have in our hands indicates that Islamic Jihad is…
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) October 17, 2023