2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை தொடர்ந்து நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டி மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், நெதர்லாந்து அணி 34 ஓவர்களில் எல்லாம் 7 விக்கெட்களை இழந்து விட்டது.
அதற்கு முன் வரை நெதர்லாந்து அணி மிகவும் நிதானமாக விளையாடி ஓவருக்கு 4 ரன்கள் என்ற அளவில் தான் ரன் எடுத்து இருந்தது. அதாவது 34 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அப்போது நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தார். அவரும் டெஸ்ட் மேட்ச் போலவே விக்கெட்டை காப்பாற்றும் எண்ணத்தில் விளையாடி வந்தார்.
பொறுத்தது போதும் பொங்கியெழு என்பது போல ஸ்காட் எட்வர்ட்ஸ் 60 ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்து அதிரடியாக விளையாடி 100 ஸ்ட்ரைக் ரேட்டாக உயர்த்தினார்.
கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கடைசி வரை களத்தில் நின்று 69 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 245 ரன்கள் குவித்தது. கடைசி ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணியால் நெதர்லாந்து ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் இரண்டாம் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி சரியாக விளையாடாமல் தோல்வி அடைந்தது.
நெதர்லாந்து அணி 200 ரன்களை தாண்டாது என்றே முதலில் எண்ணினர். அது மட்டும் நடந்து இருந்தால் நிச்சயம் தென்னாப்பிரிக்கா அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்கும். ஆனால், கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடிய ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் அணியை வெற்றி பெற வைத்தார்.