கோனேரிராஜபுரத்தில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கோனேரிராஜபுரத்தில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது சோழர் கால மூத்த தேவியான தவ்வை ஆகும். தலையில் மகுடம், காதில் குழைகளும், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிந்து அமர்ந்த நிலையில் உள்ளார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோபிநாத் கூறியதாவது, கோனேரிராஜபுரத்தில் உள்ள வயல்வெளியை ஒட்டியுள்ள பகுதியில் கிடந்த சிலையை ஆய்வு செய்தோம். அதில், கோனேரி இராஜபுரம் வரலாற்றில் திருநல்லம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட அந்த சிற்பம், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால மூத்த தேவியான தவ்வை எனக் கண்டறிந்தோம். வசீகரமான முகம், தலையில் மகுடம், காதில் குழைகளும், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிந்து அமர்ந்த நிலையில் உள்ளார். சிலையின் மார்பு பகுதி சிதைவுக்கு உள்ளாகியுள்ளது.
தேவி சிலையின் இடது பக்கத்தில் மகன் மாந்தன் சன்னவீரம் தரித்தும், வலது பக்கத்தில் மகள் மாந்தி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்திலும் உள்ளனர்.
மாந்தியின் முகமும் சிதைவுக்குள்ளாகி உள்ளது. பல்லவர்களின் ஆட்சியில், தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்துள்ளது. பிற்கால சோழர்கள் காலத்திலும், சேட்டை என்ற பெயரில் மூத்த தேவி வழிபாடு நடந்துள்ளதாகக் கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன என்று தெரிவித்தார்.