இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிறகு, காஸா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல என்று தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போர் 12-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றார். அவரை டெல் அவிவ் விமான நிலையத்திற்கே நேரில் வந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார்.
பின்னர், இருவரும் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போது, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 1,400 பேர் பலியாகி விட்டனர். அக்டோபர் 7-ம் தேதி எங்களுக்கு மற்றொரு கருப்புநாளாக மாறிவிட்டது என்று ஜோ பைடனிடம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதிபர் ஜோ பைடன் சொன்னதைப் போலவே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை விடவும் ஹமாஸ் மிகவும் மோசமானதாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, போர் தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களும் நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்கள். இதன் பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை இஸ்ரேல் தரப்பிலும் பார்க்கிறார்கள்.
காஸா பகுதியில் இருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மிகவும் வருத்தமும் அதிருப்தியும் அடைந்தேன். ஆனால், அது தொடர்பான விடியோக்களைப் பார்க்கும்போது, காஸா மருத்துவமனை மீதான தாக்குதலில் பிற அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. பிற குழுவினர் செய்தது போலவே தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இப்போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என்று விவரித்தவர், இஸ்ரேலின் பின்னால் அணி திரளுமாறு இதர நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.