எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிதி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஸ்டேட் ஆயிலுக்கு (PSO) செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலுவைத் தொகை செலுத்தாததை காரணம் காட்டி எரிபொருள் விநியோகத்தை பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையைத் தவிர மற்ற செயல்பாட்டு சிக்கல்களும் காரணமாக இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக நேற்று (அக் 17) 11 சர்வதேச மற்றும் 13 உள்நாட்டு விமானங்கள் உட்பட 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று 16 சர்வதேச மற்றும் 8 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் பயணிகள் மையம், அலுவலகங்கள் அல்லது அவர்களின் பயண முகவர்களை தொடர்பு கொள்ளுமாறும் பாகிஸ்தான் ஏர் லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.