உடுமலை பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.
இதற்காக 4 மண்டலங்களாக நிலங்கள் பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி வாய்க்கால் மூலமாக 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 1-ஆம் தேதி தேதி பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், 4-ஆம் மண்டல பாசனத்திற்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், கடந்த மாதம் 20- ஆம் தேதி முதல் இந்த மாதம் 11-ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியில், கடந்த மாதம் 22-ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன், 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மீண்டும் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தண்ணீர் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பாசன நிலங்களுக்குத் தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து விவசாயிகள் மீண்டும் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.