ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தேசியத் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், நிதி ஆயோக் துணைத் தலைவர், ஜி20 ஷெர்பா, ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை, மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அந்தந்த அமைச்சகங்கள் தலைமையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி 7 இணையப் பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல், ஒரு நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம், 21-ம் நூற்றாண்டுக்கான பலதரப்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, தீவிரவாதம் மற்றும் பணமோசடியை எதிர்த்தல் ஆகிய கருப்பொருள்களில் பயிலரங்கள் நடத்த முன்மொழியப்பட்டிருக்கிறது.
மேலும், டெல்லி பிரகடனத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து, நாடு முழுவதும் வல்லுநர்களிடமிருந்து நுண்ணறிவுகளைச் சேகரிக்க, பல்வேறு சிந்தனைக் குழுக்களை ஈடுபடுத்த ஒரு கருத்தரங்குக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு, டெல்லி பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணிக்க உயர்மட்ட கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறினார்.
இது தவிர, டெல்லி உச்சி மாநாட்டின்போது பிரதமர் தனது கருத்துக்களில் முன்மொழிந்த முன்முயற்சியான ஜி20 மெய்நிகர் உச்சி மாநாடு குறித்தும் முதன்மைச் செயலாளர் விவாதித்தார். அப்போது, எந்தவொரு நாடும் இதுபோன்ற மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்தியதில்லை. இதுவே முதல் முறை என்பதால், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், விருந்தினர் நாடுகளுக்கும் உடனடியாக தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தின்போது, 2023-ம் ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள உலகத் தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, முதன்மை செயலாளரிடம் விளக்கினார்.