கோவா மாநிலம் பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருப்பதாக, அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருக்கிறார்.
கோவா மாநிலத்தில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேட்மிண்டன் விளையாட்டை இன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சாவந்த், “37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில் கலந்துகொள்ள வருகைதரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் வரவேற்கிறேன்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் ‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’ என்கிற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இப்போட்டிகள் 43 பிரிவுகளாக நடைபெறும். ஆகவே, இன்று முதல் நவம்பர் 9-ம் தேதிவரை விளையாட்டுக் கலாசாரத்தைக் கொண்டாடுவோம்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுடே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்துகொண்டனர்.
வரலாற்றில் முதன்முறையாக, கோவா மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வு, தடகள சிறப்பையும், நட்புறவையும் மற்றும் பல அற்புதமான விளையாட்டுகளின் அறிமுகத்திற்கான களமாக இருக்கும். குஜராத்தில் நடத்தப்பட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய பதிப்பு 36 பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதேபோல, 2015-ம் ஆண்டு கேரளாவில் நடந்த போட்டிகளில் 33 பிரிவுகள் அடங்கும்.
இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஒலிம்பிக் பாணி பல் விளையாட்டு நிகழ்வு, அக்டோபர் 26 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும். சைக்கிள் பந்தயம் மற்றும் கோல்ப் போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளன.
இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 7,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். மேலும், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பல புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடற்கரை கால்பந்து, ரோல் பால், கோல்ஃப், செபக்டக்ரா, ஸ்கே தற்காப்புக் கலைகள், கலேரிப்பட்டு மற்றும் பென்காக் சிலாட் ஆகியவை அடங்கும். கூடுதலாக, படகுப் பந்தயம் மற்றும் டேக்வாண்டோ ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
மேலும், பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், லகோரி மற்றும் கட்கா விளையாட்டுகள் ஆர்ப்பாட்ட விளையாட்டுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இது விளையாட்டுப் போட்டிக்கு ஒரு தனித்துவமான மற்றும் கலாச்சார பரிமாணத்தைக் கொடுக்கும்.
கடந்த காலங்களில் இதுபோன்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா, சானியா மிர்சா, மீராபாய் சானு, சஜன் பிரகாஷ், மனு பாக்கர் உட்பட பல முக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.