இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராகப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர் சரத் பவாருக்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மும்பையில் நடந்த என்.சி.பி. பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத் பவார், “ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற முன்னாள் பிரதமர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தார். தற்போதைய பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்” என்று கூறினார்.
இதையடுத்து, சரத் பவாரின் கருத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஸ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சரத் பவாரின் பொறுப்பற்ற செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடி மிகவும் வலிமையானவர்.
ஆகவே, உள் நாட்டிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த வகையில், இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.
அரசியல் கருத்தினால் தேசம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருபோதும் சிதைக்கப்படக் கூடாது. தேசிய பாதுகாப்பு, நமது தேசத்தின் நல்வாழ்வைப் பாதுகாக்கும்போது ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். அரசியல் சார்பு அல்லது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, பியூஷ் கோயல் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் அநாகரிகமான அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் கவலை அளிக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பலமுறை பதவி வகித்தவர், தீவிரவாதம் தொடர்பான விஷயங்களில் இதுபோன்ற சாதாரணமான பார்வையைக் கொண்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இந்த அழுகிய மனநிலையை நிறுத்த வேண்டும். சரத் பவார் இனியாவது தேசத்தைப் பற்றி முதலில் சிந்திப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.