காஸா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருந்த நிலையில், அங்கு யாருமே உயிரிழக்கவில்லை, ஹமாஸ் கட்டிவிட்ட கதை அது என்று இஸ்ரேல் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே 13-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த சூழலில், நேற்று காலை காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது ராக்கெட் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் இராணுவம்தான் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். மேலும், இத்தாக்குதலில் 471 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
ஆனால், இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள், தங்கள் நாட்டின் மீது ஏவிய ராக்கெட், தவறுதலாக காஸா மருத்துவமனையைத் தாக்கியதாகவும் வீடியோ ஆதாரங்களுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்திருந்தது. அதே நாளில் இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இத்தாக்குதலில் வேறொரு அமைப்பு ஈடுபட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், காஸா மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் யாருமே உயிரிழக்கவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், “மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில்தான் ராக்கெட் வெடித்திருக்கிறது.
இதில், சில கார்கள் எரிந்திருக்கின்றன. ஆனால், யாரும் உயிரிழந்ததாகத் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது இது தெளிவாகிறது. இத்தாக்குதலில் உண்மையில் 500 பேர் கொல்லப்பட்டிருந்தால், வெடித்த சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட வீடியோவில் ஒருவரது உடல் கூட காட்டப்படவில்லை.
உயிரிழந்தவர்களின் உடல்கள் எங்கே? அத்தனை உடல்களும் சில நிமிடங்களிலேயே அகற்றப்பட்டு விட்டதா? இது சாத்தியமானதா? மேலும், தாக்குதலுக்கு உள்ளான பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கிறது. ஆகவே, அங்கு நிச்சயமாக தீப்பிடித்திருக்க வேண்டும். ஏனெனில், அங்கு தீயின் எச்சங்கள் இருக்கின்றன.
ஆனால், இஸ்ரேல் வெடிகுண்டு ஒரு இலக்கைத் தாக்கினால் அங்கு ஒரு பெரிய பள்ளம் ஏற்படுமே தவிர, தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை. அதேசமயம், ராக்கெட்டுகளை ஏவும்போது அது தீப்பிடிக்கும். ஆகவே, பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள் ஏவிய ராக்கெட்தான் மருத்துவமனையைத் தாக்கி இருக்கிறது.
இது தவிர, மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில்தான் அந்த ராக்கெட் விழுந்திருக்கிறது. இதனால், அங்கிருந்த கார்கள் தீப்பிடித்திருக்கின்றன. ஆனால், இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்ததாகக் கூறிவது ஹமாஸ் கட்டிவிட்ட கதை. இஸ்ரேல் மீது பழிபோட வேண்டும் என்பதற்காக இப்படியொரு கதையை கட்டி விட்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.