கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “கடந்த 9 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மகத்தான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதன் காரணம், சரக்குக் கையாளுதல் மற்றும் சரக்கு அளவு 2 மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்திய துறைமுகங்களின் திருப்புமுனை நேரம் கணிசமாக மேம்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளை விட சிறப்பாக இருக்கிறது” என்றார்.
கப்பல் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடற்தொழிலாளர்களுடனான சிறப்பு அமர்வில் உரையாற்றிய மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடற்தொழிலாளர்கள்தான் உலகப் பொருளாதாரத்தின் புகழ்பெற்ற ஹீரோக்கள். எதிர்காலத்தில் உலகின் திறன் தலைநகராக இந்தியா மாறும். அந்தளவுக்கு மத்திய அரசு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.
கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு குறித்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. திறன்மிக்க மனிதவளம் உள்ளிட்ட வளங்களை மேம்படுத்துவது மட்டுமின்றி, நாட்டில் கப்பல் கட்டும் சூழலை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார்.
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மது எஸ்.நாயர், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை, இந்தியாவில் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து பேசினார்.
கப்பல் மறுசுழற்சி குறித்த அமர்வில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் உரையாற்றினார். கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜெகநாதன் அமர்வுகளை நெறிப்படுத்தினார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஆப்பிரிக்க பிரதிநிதிகளுடன் வட்டமேசை மாநாட்டை நடத்தினார்.