உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் 17-வது ஆட்டம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடி ரன்களைக் குவிக்க தொடங்கினர். இதில் தன்ஷித் ஹசன் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 17 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன் பின் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து தவ்ஹித் ஹிரிடோய் களமிறங்கினார். இதற்கிடையே, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 66 ரன்கள் அடித்து, இரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில், சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் பின் முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கி நிதானமாக ஆட தொடங்கினார். தவ்ஹித் ஹிரிடோய் 35 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் உடன் இணைந்து நிதானமாக விளையாடி, முறையே 37 பந்துகளில் 46 ரன்களும், 46 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தரப்பில் இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.