இஸ்ரோவின் லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம், நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படவிருக்கிறது.
“ககன்யான்” இஸ்ரோவின் கனவுத் திட்டம் என்றே சொல்லலாம். மனிதனை விண்ணுக்கு அனுப்பி, 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, 3 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு மீண்டும் பத்திரமாக பூமிக்குக் கொண்டு வருவதுதான் இத்திட்டம். இதற்கான திட்டத்தை இஸ்ரோ கடந்த 2007-ம் ஆண்டு 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கியது.
இத்திட்டத்துக்கு கடந்த 2014-ல் “ககன்யான்” என்று பெயரிடப்பட்டது. இதன் பிறகு, ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. முதலில் ஆளில்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்தி ஆராய்ச்சி செய்து, அதன் பிறகு மனிதனை அனுப்பத் திட்டமிடப்பட்டது. இதற்காக, ஆளில்லாத ககன்யான் சோதனை விண்கலம் உருவாக்கப்பட்டது.
இந்த சோதனை வாகனமானது ஒற்றை நிலை திரவ ராக்கெட்டாகும். இதன் பேலோடுகளில் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம்ஸ் ஆகியவை அடங்கும். இவற்றில், க்ரூ மாட்யூல் ஒரு அழுத்தமில்லாத பதிப்பாகும். இது வேகத்தை குறைத்தல் மற்றும் மீட்டெடுப்பதற்கான அனைத்து அமைப்புகளையும் கொண்டிருக்கும். இதன் முழுமையான பாராசூட்கள், மீட்பு மற்றும் செயல்படுத்தும் அமைப்புகள் மற்றும் பைரோக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
இந்த க்ரூ மாட்யூலுடன் கூடிய க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சுமார் 17 கி.மீ. உயரத்தில் சோதனை வாகனத்தில் இருந்து பிரிக்கப்படும். அதன் பிறகு, சி.இ.எஸ். பிரித்து பாராசூட்டுகளின் தொடர் நிலைநிறுத்தம் தொடங்கி, ஸ்ரீஹரிகோட்டா கடற்கரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் பாதுகாப்பாக இறக்கப்படும். இதன் பின்னர், இந்திய கடற்படையின் பிரத்யேக கப்பல் மற்றும் டைவிங் குழு மூலம் மீட்கப்படும்.
இச்சோதனையானது ககன்யான் திட்டத்துக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், இந்த சோதனை விமானத்தின் வெற்றி, மீதமுள்ள தகுதிச் சோதனைகள் மற்றும் ஆளில்லா பயணங்களுக்கு உதவியாக இருக்கும். அதோடு, இந்திய விண்வெளி வீரர்களுடன் முதல் ககன்யான் பயணத்திற்கும் வழிவகுக்கும்.
இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.