சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 14 -ம் தேதி, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதும், புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில், சொலிட்டர் ஜெனரல் சுந்தரேசன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞரும், திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோ வாதாடினார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகிப்பது, செந்தில் பாலாஜியின் சகோததர் அசோக் குமார் தலைமறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர் சாட்சிகளைக் களைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், ஜாமீனில் விடுதலை செய்தால் மட்டுமே அவருக்குச் சிகிச்சை வழங்க முடியும் என்ற நிலை இல்லை. இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கௌவுல் தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின்ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 30 -ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.