சென்னை புழல் சிறை கைதி ராஜேஷ் என்பவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில அபகரிப்பு தொடர்பாகப் போலீசால் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி முதல் ராஜேஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை புழல் சிறை கைதி ராஜேஷ் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். நெஞ்சு வலியால் துடித்த கைதி ராஜேஷை ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வரப்பட்டபோது அவர் வழியில் உயிரிழந்தார்.
இதனிடையே, சென்னை புழல் மத்தியச் சிறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய அவர்கள், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காகப் பரிந்துரைக்க ரூ.50,000 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது.
அதேபோல, உள்நோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்குப் பரிந்துரைக்க ரூ. 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
சென்னை புழல் சிறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், கைதி ஒருவர் நெஞ்சு வழியில் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.