தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு துரோகம் செய்து வருகிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீட்டுத் திட்டம், நடைபாதை வணிகர்களுக்கான கடனுதவித்திட்டம், சிறு தொழில் செய்வோர்களுக்கான கடன் உதவித் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற நல்ல திட்டங்களுக்குத் தமிழக அரசு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக, நலவாரியங்களுக்கு அளிக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
இந்த நிலையில், தமிழக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.
இதில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், விபி துரைசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கண்டன கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக பிரதமர் மோடி கிடைத்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின்புதான், உலக நாடுகளின் பார்வை பாரதத்தின் மீது விழுந்துள்ளது. பாரதத்தை மிகப் பெரிய வல்லரசு நாடாக மாற்றவேண்டும் என்று பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
அது மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அளவில்லாத திட்டங்களைக் கொடுத்துள்ளார்.
ஆனால், திமுக அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை முறையாகத் திட்டங்களுக்குச் செலவு செய்யாமல் உள்ளது. இந்த போக்கை திமுக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.