நாட்டின் மிக உயர்ந்த ஏஜென்ஸிகளில் ஒன்றான சிபிஐயில் மத்திய அரசு முக்கிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சிபிஐ மேலும் வலுவாக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்குப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக தற்போது உள்ள விதிமுறைகளை மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன் காரணமாக சிபிஐ-யில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிக அளவில் பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு புலனாய்வு ஏஜென்ஸிகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சிபிஐ, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை என பல்வேறு துறைகள் உள்ளன.
கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அதிகளவில் இருப்பதாலும், பல்வேறு குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும், போதுமான அளவு அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்.
தற்போது சிபிஐ-யில் 42 பணியிடங்களும் மத்திய உளவுத்துறையில் பிரிவில் 32 பணியிடங்களும் காலி இடங்களாக உள்ளன.
இதுவரை சிபிஐயில் எஸ்பி அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே வழக்கு விசாரணை அதிகாரியாக இருக்க முடியும். மேலும், சிபிஐ பணியில் இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 9 ஆண்டுகளுக்கு மேலாக மாநில பணியில் இருக்க வேண்டும், உள்ளிட்ட சில வரைமுறைகள் உள்ளன. அப்படி இருந்தால் மட்டுமே சிபிஐ பணிக்குச் செல்ல முடியும்.
இந்த நிலையில், முக்கிய மாற்றம் ஒன்றை மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி 5 ஆண்டுகள் பணிபுரிந்தாலே சிபிஐ அதிகாரிகள் பணிக்குத் தகுதி வாய்ந்தவர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ உள்ளிட்ட முக்கிய ஏஜென்லிகள் மேலும் வலுவடையும்.